மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.10¾ லட்சம் பறிமுதல் - என்ஜினீயரிடம் இருந்து கைத்துப்பாக்கியும் சிக்கியது

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.10¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் என்ஜினீயரிடம் இருந்து கைத்துப்பாக்கியும் சிக்கியது.
மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.10¾ லட்சம் பறிமுதல் - என்ஜினீயரிடம் இருந்து கைத்துப்பாக்கியும் சிக்கியது
Published on

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க உரிய ஆவணங்களுடன் பணத்தை கொண்டு செல்லும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அதிகாரியுமான சுரேஷ் தலைமையில் பறக்கும் படையினர் கோவை அருகே உள்ள மதுக்கரை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. உடனே அதிகாரிகள் அதை ஆய்வு செய்தபோது 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மொத்தம் ரூ.10 லட்சத்து 64 ஆயிரம் இருந்தது.

உடனே அதிகாரிகள் அந்த காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நடுக்கடதில் பகுதியை சேர்ந்த அபிலேஷ் என்பதும் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அத்துடன் கோவைக்கு மருந்து வாங்க ரூ.10 லட்சத்து 64 ஆயிரத்தை எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் ஆவணங்கள் இல்லை. எனவே அந்த பண த்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை தெற்கு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் தேர்தல் பிரிவு பறக்கும்படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கோவை அருகே உள்ள பூசாரிபாளையம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி இருந்தது.

உடனே அதிகாரிகள் அந்த காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர், சுண்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், என்ஜினீயர் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அந்த கைத்துப்பாக்கிக்கான உரிமத்தை கேட்டனர். ஆனால் ராஜ்குமாரிடம் உரிமம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து மாநகர படைக்கலன் பிரிவில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com