டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் நடவடிக்கை

பேரங்கியூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் நடவடிக்கை
Published on

அரசூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பேரங்கியூர் பகுதியில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழு உள்ளதா? எனவும் கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள வாகனங்கள் பஞ்சர் கடையில் வைக்கப்பட்டிருந்த டயர்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட் டார்.

மேலும் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகங்கள், டீக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து திருநாவலூர் அடுத்த மேட்டத்தூர் ஊராட்சியில் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படாமலும், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான முறையில் குளோரின் கலந்து வினியோகம் செய்யப்படாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, உளுந்தூர்பேட்டை தாசில்தார் இளங்கோவன், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலக்கண்ணன், சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com