ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை - நெல்லை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை - நெல்லை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

நெல்லை,

தென்காசி மாவட்டம் குமந்தாபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த சண்முகையா மகன் முத்துசாமி (வயது 46). இவர், ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பில் கலெக்டர் முருகேசன் (43) என்பவரிடம் மனு கொடுத்தார்.

பல முறை நேரில் சந்தித்தும் அவர் சரியாக பதில் செல்லவில்லை. இந்த நிலையில் முருகேசன் தனக்கு ரூ.1,000 லஞ்சம் கொடுத்தால் மனுவை பரிசீலனை செய்வதாக கூறினார். முத்துசாமிக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை.

அவர் இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர் போலீசாரின் யோசனைப்படி, கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்துக்கு 14-11-2011 அன்று சென்ற முத்துசாமி, போலீசார் கொடுத்த ரசாயணம் தடவிய ரூ.1,000-த்தை கொடுத்தார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்கால் விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கு தொடர்பான 13 ஆவணங்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை நீதிபதி பத்மா விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், முருகேசனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com