வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி விவகாரம்: கோவையில் கீதாஞ்சலி குழும அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடிக்கு நடைபெற்ற மோசடி தொடர்பாக, கோவையில் கீதாஞ்சலி குழும அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி விவகாரம்: கோவையில் கீதாஞ்சலி குழும அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
Published on

வடவள்ளி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்ஷி மீதும் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது.

அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கீதாஞ்சலி நகைக்கடை குழும இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணன் என்பவர் கோவை வடவள்ளியை அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் இவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் கிருஷ்ணனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது வடவள்ளியில் உள்ள ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் உடன் அழைத்து சென்றிருந்தனர். தாங்கள் கொண்டு வந்த ஆவணங்களை காண்பித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கீதாஞ்சலி நகைக்கடை குழும இயக்குனர் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீதாஞ்சலி குழுமத்தில் நான் தனி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். என்னை போன்று தனி இயக்குனர்களாக பணியாற்றும் மேலும் 2 பேர் புனேவில் உள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு முறை எங்களது கூட்டம் மும்பையில் நடைபெறும். அங்கு சென்று வரவு, செலவு விவரங்களை ஆடிட்டரிடம் சமர்பித்து விட்டு வந்து விடுவோம். எங்களுக்கு வேறு வந்த விவரங்களும் தெரியாது.

பண பரிவர்த்தனை குறித்தும், ஆவணங்கள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். உரிய பதிலை கூறினேன். வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை. எனவே விசாரணையை முடித்துக்கொண்டு அவர்கள் சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com