

சென்னையில் கடந்த காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசனை செய்து, விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை புனரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டது. அதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையும் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டப்பணிகள் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ள ஒப்பம் கோரப்பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.