

திண்டுக்கல்:
ரூ.18 கோடி முறைகேடு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாழையூத்தில் பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியூர்களில் இருந்து சமையல் எண்ணெய் கொண்டு வரப்பட்டு, பாக்கெட் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு எண்ணெய் கொள்முதல், விற்பனை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ரூ.18 கோடி மதிப்பில் சமையல் எண்ணெய் இருப்பதாக பொய் கணக்கு காண்பித்து முறைகேடு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலாளர் ஷியாம்சுந்தர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் பொய் கணக்கு காண்பித்ததாக உதவி மேலாளர்கள் சிவக்குமார், கிரண்குமார் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
திருடி விற்பனை
இந்த முறைகேட்டில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எண்ணெயை லாரியில் ஏற்றி வரும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமர் (வயது 26) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வௌயானது.
அதுபற்றி போலீசார் கூறுகையில், பழனி நிறுவனத்துக்கு வெளியூரில் இருந்து டேங்கர் லாரி மூலம் சமையல் எண்ணெய் கொண்டு வரப்படுவது வழக்கம். இதையடுத்து பழனிக்கு செல்லும் வழியில் டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெயை திருடி விற்றுள்ளனர். இதற்கு டிரைவர் ராமர் உடந்தையாக இருந்து உள்ளார்.
மேலும் 3 பேர் கைது
அந்த சமையல் எண்ணெயை ஒட்டன்சத்திரம் காப்பிளியபட்டியை சேர்ந்த பார்த்தசாரதி (37), நாமக்கல்லை சேர்ந்த சுரேஷ்குமார் (42) ஆகியோர் வாங்கி தனியாக கடை வைத்து விற்பனை செய்து உள்ளனர். மேலும் சமையல் எண்ணெயில் ஒருசில ரசாயன திரவத்தை கலந்து தீபம் எண்ணெய் போன்று விற்றுள்ளனர்.
அதேபோல் ரைஸ் எண்ணெயை கோழி தீவனத்துடன் கலப்பதற்கு கோழி பண்ணைக்கு விற்பனை செய்து இருக்கின்றனர். இதுதொடர்பாக ராமர், பார்த்தசாரதி, சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களையும் தேடி வருகிறோம், என்று போலீசார் கூறினர்.