திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக போலி பத்திரம் தயாரித்து ரூ.2 கோடி மோசடி

திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக போலி பத்திரம் தயாரித்து ரூ.2 கோடி மோசடி
Published on

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை நேருவில் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது41). வெளிநாடு வாழ் இந்தியர். இவரின் உறவினரான ஆரோக்கியராஜ் மகாபலிபுரம் கிழக்கு கடற்கரையில் பகுதியில் 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருவதாக தெரிவித்தார். அதனை உண்மை என நம்பிய ராஜேந்திரன் கடந்த ஆண்டு நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.1 கோடியே 60 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் ஆரோக்கியராஜ் காலம் கடத்தி வந்தார். இதனால் ராஜேந்திரனுக்கு சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் அவர் நிலம் குறித்து விசாரித்தபோது திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலியாக பத்திரம் தயாரித்து காட்டி மோசடியாக தன்னிடம் விற்க முயற்சிப்பதை அறிந்து ஏமாற்றமடைந்தார்.

ரூ.2 கோடி மோசடி

இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதில், ஆரோக்கியராஜ், அவரது மனைவி நான்சி, உமையம்மாள், கடலூர் மாவட்டம் எய்தனூர் சீத்தராமன், அவருடைய மனைவி அமுதா, மகள்கள் சத்யா, அகிலா, காயத்ரி, மருமகன்கள் அபிலேஷ், கணேஷ், மைத்துனர் குமரன் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் ராஜேந்திரனின் நண்பரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவரிடமும் இதே கும்பல் ரூ.30 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பதாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாசு அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக கூறி சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com