

முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த செங்காங்காடு கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்இன்ஸ்பெக்டர் நீலகண்டன், ஏட்டு வெற்றிச்செல்வம் மற்றும் ஊர்க்காவல்படையினர் கடலோர பகுதியில் ஒட்டியுள்ள கந்தப்பரிசான் ஆறு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு படகை நோக்கி 1 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தது. அவைகளில் வந்த ஒரு கும்பல் காரில் இருந்து கஞ்சா மூட்டைகளை இறக்கி கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் ஏற்றினர். இதைக்கண்ட கடலோர காவல் படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பியோடினர். ஆனாலும் போலீசார் விடாமல் விரட்டிச்சென்று செங்காங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 45), வீரைய்யன்(35)ஆகிய இருவரையும் பிடித்தனர். படகில் இருந்த 180 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட இருவரையும் கைது செய்தனர்.
முத்துப்பேட்டையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.