

திரு.வி.க நகர்,
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் அருகே சி.டி.எச். சாலையில் நேற்று காலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் அதிக வேகத்தில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய டிரைவர் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில், 50 கிலோ எடையுள்ள 18 செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தப்பி ஓடிய டிரைவர் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையது சாதிக் (வயது 25) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பிடிபட்ட அனைத்து செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார், வனத்துறை அலுவலகத்தில் அதிகாரி அசோக்கிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பிடிபட்ட செம்மரக்கடைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யாருக்கு கடத்தி செல்லப்பட்டது? என வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.