செல்போன் ‘சிம்கார்டு’ மூலம் நூதனமுறையில் வங்கி கணக்கில் ரூ.3½ கோடி மோசடி நைஜீரிய வாலிபர் உள்பட 5 பேர் கைது

செல்போன் சிம்கார்டை பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.3½ கோடியை மோசடி செய்த நைஜீரிய வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் ‘சிம்கார்டு’ மூலம் நூதனமுறையில் வங்கி கணக்கில் ரூ.3½ கோடி மோசடி நைஜீரிய வாலிபர் உள்பட 5 பேர் கைது
Published on

சென்னை,

செல்போன் சிம்கார்டை பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் சுருட்டப்பட்டு உள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 5 பேர் புகார் செய்தனர். இதில் ரூ.3 கோடியை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர். நூதன முறையில் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு உள்ளது.

இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் ஐதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை அறிந்த சென்னை போலீசார், கோர்ட்டு அனுமதி பெற்று அவர்களை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு, சந்தோஷ் பானர்ஜி (வயது 24), ராஜ்குண்டு (25), அங்கன்ஷா (24), சந்தன்வர்மா (24), ஓடாப்ஹென்றி (25), இதில் ஓடாப்ஹென்றி நைஜீரிய நாட்டை சேர்ந்தவர். மற்ற 4 பேரும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள். நைஜீரிய ஆசாமி தான் புதுமையான இந்த நூதன மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

இந்த மோசடி எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

பிடிபட்ட மோசடி நபர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களையும், செல்போன் எண்களையும் இணையதளம் மூலம் அறிந்துகொண்டு, வாடிக்கையாளரின் சிம்கார்டு தொலைந்துவிட்டதாக கூறி, போலி முகவரி கொடுத்து செல்போன் நிறுவனங்களிடம் அதே எண்ணில் புதிய சிம்கார்டு வாங்கி விடுவார்கள்.

பின்னர் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை ஆன்-லைன் மூலம் தங்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள். செல்போன் எண்ணில் வரும் ஓ.டி.பி. எண்ணை இதற்கு பயன்படுத்துகிறார்கள். உண்மையான வாடிக்கையாளரின் செல்போன் எண் செயலற்று போய்விடுவதால், அவர்களுக்கு இதுபற்றிய உண்மை உடனே தெரிவதில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com