கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்: நீலகிரியில் ரூ.321 கோடியில் வளர்ச்சி பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

நீலகிரி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.321 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்: நீலகிரியில் ரூ.321 கோடியில் வளர்ச்சி பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
Published on

ஊட்டி,

கொரோனா பரவல் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார்.

பின்னர் அவர் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் காலை 11 மணியளவில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துகிறார். தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம், நகர்ப்புற ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் போன்ற துறைகள் சார்பில் ரூ.189.35 கோடியில் 67 முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதில் குன்னூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கேத்தி பிரகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட 172 குடியிருப்புகள், நவீன வசதிகள் ஏற்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை போன்ற துறைகள் சார்பில் ரூ.131.57 கோடியில் புதிதாக 123 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறார். ஆய்வு கூட்டம் நடைபெறும் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மாளிகை வளாகம், ஆய்வு கூட்டம் நடைபெறும் அரங்கு, சமையல் கூடம், தங்கும் அறைகள், வரவேற்பு அறை உள்ளிட்ட இடங்களில் நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அரங்கில் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு உள்ளது. குப்பைகள், புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதுபோன்று கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலமும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஊட்டிக்கு வந்தார். பின்னர் அவர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் முதல்-அமைச்சர் வந்து செல்லும் சாலைகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டிக்கு வருவதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ள கக்கநல்லா, நாடுகாணி, எருமாடு, பாட்டவயல் மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப் படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி நீலகிரி மாவட்ட போலீசார் 1,200 பேர், வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com