ரூ.3,770 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கு ரூ.3,770 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.3,770 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாவட்ட வங்கி ஆலோசனை குழு முன்னிலையில் கலெக்டர் சாந்தா, பெரம்பலூர் மாவட்டத்திற்கான 2018-19ம் ஆண்டு கடன் திட்ட அறிக்கையை வெளியிட மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி பெற்று கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமபுற வங்கிகளின் மூலமாக ரிசர்வ் வங்கியின் துறைசார்ந்த முன்னுரிமை கடன்கள் வழிகாட்டுதலின் படியும் மற்றும் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வழிகாட்டுதலின் படியும் ரூ.3,770 கோடி 2018-19 ம் ஆண்டிற்கான கடன் இலக்காக பெரம்பலூர் மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட அறிக்கையானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் விவசாய கடன்களுக்காக ரூ.2,715 கோடியும், விவசாயம் சார்ந்த தொழிலுக்கு ரூ.339 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.716 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட ரூ.170 கோடி வங்கிகளுக்கு கூடுதலாக கடன் இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயத்திற்கு 72 சதவீதமும், விவசாயம் சர்ந்த தொழிலுக்கு 9 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 19 சதவீதமும் ஆகும். எனவே வங்கியாளர்கள் அனைவரும் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்டத்தின்படி இலக்கினை அடைய, அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், தஞ்சாவூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் பத்மநாபன், முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்து வங்கிகளை சார்ந்த வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com