

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பஞ்சவர்ண செல்வி(வயது 47). இவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். ஆனால் ஏலச்சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சுமார் ரூ.4 கோடி வரை மோசடி செய்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதுபற்றி விசாரிக்கும்படி அந்த புகார் மனு சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவன்-மனைவி இருவரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் பஞ்சவர்ண செல்வி, மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். சோழவரம் போலீசார் பஞ்சவர்ண செல்வியை அழைத்து வந்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.