

சென்னை,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 49), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுமதி (30). இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதி, ராஜேஸ்வரியை அணுகி தான் வெளிநாட்டில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் குறைந்த முதலீட்டில் அதிக பணம் பெற்று தரும் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தால் விரைவில் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி தன்னுடைய வீட்டின் அருகே உள்ள மற்றொரு இடத்தை விற்று ரூ.20 லட்சம், ரூ.20 லட்சம் என 2 தவணைகளாக ரூ. 40 லட்சம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்று கொண்ட அவர் ராஜேஸ்வரியிடம் சரிவர பேசாமல் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் சுமதி ராஜேஸ்வரியின் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
மிரட்டல்
இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி தனது பணத்தையும், அதற்கான லாபத்தையும் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுமதி, அவரது கணவர் சதீஷ், சுமதியின் சகோதரி பிரசன்னலட்சுமி, மாமனார் அன்பழகன் (61), மாமியார் ஹேமலதா (51), சதீஷின் சகோதரர் யுவராஜ் (30) ஆகியோர் ராஜேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜேஸ்வரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
கைது
இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுமதி, பிரசன்னலட்சுமி, அன்பழகன், யுவராஜ், ஹேமலதா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சதீஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.