

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சொறிப்பாறைப்பட்டி பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் டி.ஜி.வினயை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேத்தூர் ஊராட்சியில் சொறிப்பாறைப்பட்டி, முசுக்கம்பட்டி உள்பட 23 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு மானியத்தில் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பயனாளிகள் தங்கள் சொந்த செலவில் கழிப்பறை கட்ட வேண்டும். பின்னர் அதற்கான மானிய தொகை ரூ.12 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 38 பேர் கழிப்பறை கட்டினோம். ஆனால் இதுவரை பணம் கிடைக்கவில்லை. மேலும், கடந்த 2009-ம் ஆண்டே இறந்துபோன பழனிச்சாமி, பெரியண்ணன், நல்லு மற்றும் 152 பேருக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்ததாக கூறி ரூ.22 லட்சம் மானிய தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையாடல் செய்துள்ளனர்.
இதேபோல, கடந்த மாதம் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிடைக்கப்பெற்ற சமூக தணிக்கை அறிக்கையை பார்த்தபோது பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 3 பண்ணைக்குட்டைகள் மட்டுமே அமைத்துவிட்டு, 8 பண்ணைக்குட்டைகள் அமைத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளப்புலி முதல் பெருமாள்மலை வரையிலான வரத்துவாய்க்காலை தூர்வாரியதாக கணக்கு காட்டியது உள்பட மொத்தம் ரூ.18 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.