தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த பெங்களூரு என்ஜினீயர் கைது

இ்ந்தி நடிகர் போல் ‘பேஸ்புக்’கில் பழகி தொழில் அதிபரை ஏமாற்றி ரூ.40 லட்சம் பறித்த பெங்களூரு என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த பெங்களூரு என்ஜினீயர் கைது
Published on

மும்பை,

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ். இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமானார். அப்போது, அவர் தன்னை இந்தி நடிகர் திவ்யா கோஸ்லா குமார் என அறிமுகப்படுத்தி கொண்டார். இதை நம்பிய தினேஷ் அந்த நபருடன் பேஸ்புக்கில் அடிக்கடி பேசி வந்தார்.

இந்தநிலையில், தினேஷ் தான் இந்தி சினிமாவில் பணம் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த ஆசாமி, தான் புதிதாக திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும் அதற்கு தன்னிடம் முதலீடு செய்யும் படியும் கூறியுள்ளார். மேலும் தனது உதவியாளர் பிரஜ்வால் கோபாலகிருஷ்ணன் என்பவரை அனுப்பி வைப்பதாகவும், மும்பையில் வந்து அவரிடம் பணத்தை கொடுக்கும்படியும் கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ் மும்பை வந்து பிரஜ்வால் கோபாலகிருஷ்ணனை சந்தித்து ரூ.40 லட்சத்தை கொடுத்தார்.

அப்போது அவரை தினேஷ் தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டார்.

அதன்பின்னர் தினேசால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் தன்னிடம் பணம் வாங்கிய பிரஜ்வால் கோபாலகிருஷ்ணன் தான், நடிகர் பெயரில் போலி பேஸ்புக் மூலம் பழகி தன்னிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதை அறிந்தார்.

இதுபற்றி அவர் மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிரஜ்வால் கோபாலகிருஷ்ணன் என்ஜினீயர் என்பதும், பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயின் மருத்துவ செலவுக்காக இப்படி இந்தி நடிகர் போல் நடித்து தொழில் அதிபரிடம் பணம் பறித்ததாக அவர் கூறினார். இதையடுத்து அவர் மும்பை கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வருகிற 10-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com