சென்னையில் ரூ.42½ கோடி மோசடி; தொழில் அதிபர், மனைவியுடன் கைது

சென்னையில் ரூ.42½ கோடி மோசடி புகாரில் தொழில் அதிபர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் ரூ.42½ கோடி மோசடி; தொழில் அதிபர், மனைவியுடன் கைது
Published on

சென்னை,

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் நாராயணன். இவர் அன்னை பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீதர் நாராயணன் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

அன்னை கட்டுமான நிறுவனத்தில் நான் செயல் இயக்குனராக இருக்கிறேன். சென்னை போயஸ் சாலையில் செயல்படும் கால் எக்ஸ்பிரஸ் கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனத்தின் அதிபர் பி.கே.ரமேஷ் (வயது 61), அதே நிறுவனத்தில் இயக்குனராக உள்ள அவரது மனைவி மரியா ரமேஷ் (55) ஆகிய இருவரும் சேர்ந்து என்னிடம் ரூ.18 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டனர். அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கூட்டாக சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யலாம் என்று என்னிடம் ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கினார்கள்.

ஆனால் சொன்னபடி அவர்கள் நிலத்தில் கட்டுமான பணி எதுவும் நடக்கவில்லை. அதே நிலத்தில் வீடு கட்டி விற்க டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமும் ரூ.24 கோடி வாங்கி ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதே நிலத்தை அடமானம் வைத்து எல்.ஐ.சி.யிலும் கடன் வாங்கி உள்ளனர். மோசடி செய்யும் நோக்கில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வசூலித்து தரவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கணவன்-மனைவி கைது

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் விஜய் ஆனந்த், இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரூ.42 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கட்டுமான நிறுவன அதிபரும், தொழில் அதிபருமான ரமேஷ், அவரது மனைவி மரியா ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மரியா ரமேஷ் டாக்டருக்கு படித்தவர். ஆனால் டாக்டராக பணிபுரியாமல் தனது கணவருடன் சேர்ந்து கட்டுமானத் தொழில் செய்துவந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர்களது மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com