தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஜாமர் கருவி பொருத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஜாமர் கருவி பொருத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சியில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஜாமர் கருவி பொருத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
Published on

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள்தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் சிறைக்குள்ளேயே காய்கறிகள் விளைவித்தல், தோட்ட வேலை செய்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், இனிப்பு பலகாரங்கள் தயாரித்தல் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கைதிகள் தயாரித்த பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறையின் முன்பு சிறை அங்காடி மற்றும் கைதிகளால் நடத்தப்படும் உணவகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று பகல் நடந்தது. இதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, சிறை அங்காடியையும், உணவகத்தையும் திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படும். கைதிகளை பார்க்க வரும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த அங்காடி பயனுள்ளதாக இருக்கும். இங்கு 80 கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே சென்றபிறகு, சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அங்காடி மற்றும் உணவகத்தின் வருமானத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கும், 40 சதவீதம் அரசுக்கும், மீதமுள்ளவை சிறைத்துறைக்கும் கிடைக்கும்.

சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தொழில்நுட்ப முறைகளை கையாண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஜாமர் கருவி பொருத்த ரூ.5 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் 12 இடங்களில் ஜாமர் கருவி மற்றும் அதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளன. இது தவிர சிறைகளில் ஏற்கனவே சி.சி.டி.வி. கேமராக்களும் உள்ளன.

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் 1,000 ஜெயில் வார்டர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எடுக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் ஒவ்வொரு சிறைக்கும் 100 வார்டர்கள் கிடைப்பார்கள். அவர்களுக்கு பயிற்சி அளித்து சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம். சிறைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் கைதிகளின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு திருச்சி மத்திய சிறையில் அவர் ஆய்வும் நடத்தினார். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com