எடப்பாடியில் ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

எடப்பாடியில் ரூ.5 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
எடப்பாடியில் ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர், சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தையும், குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

எடப்பாடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1,156 சதுரடி பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி மற்றும் வீரக்கல்புதூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு ரூ.17 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள 698 கிராம குடியிருப்புகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச்சாலை திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாளபுரம் ஊராட்சியில் ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி சாலை பிரிவில் இருந்து வெள்ளாளபுரம்- அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளி கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டத்தில் வி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, சவரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் கே.ஏ.என்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குஞ்சாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் ரூ.11 கோடியே 54 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 8 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 42 புதிய வகுப்பறைகள், 4 அறிவியல் ஆய்வகங்கள், மாணவ-மாணவிகளுக்கான 21 கழிப்பறைகள், 3 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கும், 8 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் இருப்பாளி ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கும் தற்போது அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த நிகழ்ச்சியில் ரூ.11 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எடப்பாடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்காக ரூ.3 கோடியே 25 லட்சம் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குள் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்களோ? அவையெல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி வருகிறோம்.

அதாவது, புதிய கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பி.டெக் கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை, புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜலகண்டாபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விழாவில், மாவட்ட கலெக்டர் ராமன், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், ராஜா, மனோன்மணி, சித்ரா, நகராட்சி மண்டல இயக்குனர் அசோக்குமார், மண்டல நிர்வாக பொறியாளர் கமலநாதன், எடப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், கூட்டுறவு அச்சக சங்க தலைவர் கந்தசாமி, நகர பொருளாளர் செங்கோடன், எடப்பாடி ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ், கொங்கணாபுரம் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர்மணி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், துரை, ஆவின் தலைவர் ஜெயராமன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராணி முத்துக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜன், பாலாஜி, ராஜ்குமார், மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் தேவராஜ், பூலாம்பட்டி பாலு, ஒப்பந்ததாரர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com