

மும்பை,
மும்பை தாதர் கிழக்கில் உள்ள பன்னாட்டு தொழில் மைய சேவை கட்டிடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் போலி இணைய தளம் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்ற வர்த்தகம் செய்து பணமோசடி நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு ஒரு போலி இணைய தளம் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக தொகையுடன் திருப்பி தருவதாக கூறி சுமார் 500 பேரிடம் ரூ.6 காடியே 25 லட்சம் மோசடி செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த தன்வீர், ஆசாத், சாருக், வியாங்ட்சலம், பய்யாஜ், சஞ்சய், பர்வேஸ், இம்ரான் கான், முகமது சேக், அசாருதீன் சேக் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தி வந்த 96 மடிக்கணினிகள், 17 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மோசடி தொடர்பாக கைதான 10 பேர் மீதும் மாட்டுங்கா போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.