கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை பிடிக்க வலைவீச்சு: ரூ. 6 லட்சம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிய ஆந்திர வாலிபர்

ரூ.6 லட்சம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர்க்கை கடிதத்துடன் வந்த ஆந்திர வாலிபர் மதுரை மருத்துவக்கல்லூரியில் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இதுபோன்று பல மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு போலி கடிதங்களை கொடுத்தவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை பிடிக்க வலைவீச்சு: ரூ. 6 லட்சம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிய ஆந்திர வாலிபர்
Published on

மதுரை,

மதுரை மருத்துவக்கல்லூரி டீன் வனிதா. நேற்று இவர் மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்து போது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னுடைய பெயர் ரியாஸ் என்றும், ஆந்திராவில் இருந்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு சேருவதற்காக வந்திருப்பதாக கூறி, அதற்குரிய நியமன கடிதத்தையும் கொடுத்தார்.

அதை பார்த்த டீன் வனிதா பெரும் அதிர்ச்சி அடைந்தார். ஏன் என்றால் அந்த கடிதத்தில் மதுரை மருத்துவக்கல்லூரி பெயருடன் வாலிபர் ரியாஸ்சுக்கு முதலாம் ஆண்டு இடம் கிடைத்ததாக டீன் கையெழுத்து போட்டு இருப்பது போன்று இருந்தது. உடனே அவர் இது குறித்து வாலிபரிடம் எதுவும் தெரிவிக்காமல் தல்லாகுளம் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கூறுகையில், ஆந்திராவில் பிளஸ்-2 முடித்த பின்பு, நீட் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தேன். அப்போது, எனக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் டெல்லியில் இருந்து விக்ரம்சிங் பேசுவதாக கூறினார். எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று கூறினார். உடனே எனது பெற்றோர் அவரிடம் பேசி அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறினார்கள். அதன் பின்னர் அவர் ரூ.20 லட்சம் கேட்டார். அதுவும் கொடுக்க முடியாது என்று கூறியதால் நீங்கள் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்? என்று கேட்டார். நாங்கள் ரூ.6 லட்சம் கொடுக்க முடியும் என்றோம். அதை தொடர்ந்து அவர் தெரிவித்த வங்கி கணக்கில் 3 தவணையாக ரூ.4 லட்சம் வரை அனுப்பினோம்.

பின்னர் சம்பவத்தன்று அவர் தொடர்பு கொண்டு உங்களுக்கு மதுரை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. அதற்கான நியமன கடிதம் என்னிடம் உள்ளது என்று அந்த கடிதத்தின் நகலை அனுப்பி வைத்தார். மீதி உள்ள ரூ.2 லட்சத்தை கொடுத்து விட்டு கடிதத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். எனது பெற்றோரும் பணத்தை கொடுத்து அந்த நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டனர். அந்த கடிதத்துடன் தான் இங்கு வந்து டீனை சந்தித்த போது, அது போலி கடிதம் என்பது எங்களுக்கு தெரியவந்தது.

மேலும் அந்த விக்ரம்சிங் இந்தியா முழுவதும் 60 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்று கொண்டு பல கல்லூரிகளின் பெயரில் போலி நியமன கடிதம் கொடுத்துள்ளார். எங்களை போன்று பலரும் அவரிடம் ஏமாந்து உள்ளதாக அந்த வாலிபர் தெரிவித்தார். எனவே போலீசார், டீன் கொடுத்த புகாரின் பேரில் டெல்லியை சேர்ந்த விக்ரம்சிங், வாலிபர் ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கல்லூரிக்கு வாலிபர் ரியாஸ் வருவதற்கு முன்பு, பெண் ஒருவர் இதேபோன்று கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக கூறி கடிதத்துடன் வந்துள்ளார். அவரிடம் டீன் வனிதா, கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து பல நாட்கள் ஆகி விட்டது என்று கூறியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து உடனே சென்று விட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த ஒருவர், போலி கடிதம் தொடர்பாக விக்ரம்சிங்கிற்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உடனே மதுரையில் பதுங்கி இருந்த அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவர் மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மதுரை மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com