தொடர்ந்து மிரட்டும் புயல்களால் நாகை மாவட்டத்தில் ரூ.70 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிப்பு

தொடர்ந்து மிரட்டும் புயல்களால் நாகை மாவட்டத்தில் ரூ.70 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்
Published on

54 மீனவ கிராமங்கள்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் என்பது பிரதான தொழிலாக உள்ளது. மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் மீன்பிடித்தொழில் விளங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், பழையார், புதுப்பட்டினம், பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட 54 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியதால் நாகை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி, ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து நாகை துறைமுக அலுவலகத்தில் 3, 5, 8-ம் எண் வரையில் அடுத்தடுத்து புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டது.

கடலுக்கு செல்லவில்லை

இதன் காரணமாக நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னர் கடந்த 3 நாட்களாக 3 நாட்டிகல் தூரம் மட்டுமே சென்று மீன்பிடிக்க பைபர் படகு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதால் அவர்கள் மட்டும் தொழிலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனவே கடந்த 3 நாட்களாக கடலுக்கு சென்று வந்த பைபர் படகு மீனவர்களும் நேற்று முதல் தொழிலுக்கு செல்லவில்லை. கஜா புயலின்போது ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து படகுகளையும் அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ரூ.70 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு ரூ.5 கோடிக்கு மீன் வர்த்தகமானது நடைபெறும். அதேபோல ஐஸ்கட்டி தொழிற்சாலை உள்ளிட்ட மீன்பிடித் தொழில் சார்ந்த பிற தொழில்களில் இருந்தும் நாளொன்றுக்கு ரூ.2 கோடிக்கு வர்த்தகமானது நடைபெறும். இந்த நிலையில் நிவர் மற்றும் புதிதாக உருவாகி உள்ள புயல் காரணமாக கடந்த 10 நாட்களாக நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ரூ.70 கோடிக்கு மேல் மீன்பிடித்தொழில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். எனவே தொடர்ந்து மிரட்டி வரும் புயல்களால், வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடங்கிய ஐஸ்கட்டி தொழிற்சாலை

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வெளி மாநில தொழிலாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 ஐஸ்கட்டிகள் தயாரிக்கப்பட்டு ரூ.70, 80 என ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் புயல்களின் காரணமாக விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால், ஐஸ் தொழிற்சாலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com