

பெங்களூரு,
கர்நாடகத்தில் ரூ.8,165 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 22.27 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று சட்டசபையில் சித்தராமையா அறிவித்தார்.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்தராமையா பதில்
இந்த கூட்டத் தொடரின் 13-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்த ராமையா பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சி(காங்கிரஸ்) உள்பட அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர் களும் வலியுறுத்தி பேசினர். விவசாயிகளின் நலனில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. முன்பு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.1,600 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சி காலத்தில் ரூ.3,600 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
ரூ.1.16 லட்சம் கோடி விவசாய கடன்
கர்நாடகத்தில் கூட்டுறவு, தேசிய வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளில் இருந்தும் ரூ.1.16 லட்சம் கோடி விவசாய கடன் பெறப்பட்டுள்ளது. இதில் குறுகிய கால கடன் அதாவது பயிர்க்கடன் மட்டும் ரூ.52 ஆயிரம் கோடி ஆகும். இதில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரத்து 736 கோடி பயிர்க் கடனை 22 லட்சத்து 27 ஆயிரத்து 756 விவசாயிகள் பெற்றுள்ளனர்.
மீதமுள்ள கடன் தேசிய வங்கிகளில் பெற்றுள்ளனர். விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு சொல்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேல், எக்காரணம் கொண்டும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி 2 நாட்களுக்கு முன்பு கூட, விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் சுமையை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்காது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
நாங்கள் எதிர்க்கவில்லை
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இப்போது கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்டால், மத்திய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொல்கிறது.
விவசாய கடனை தள்ளுபடி செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. கர்நாடகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள மொத்த விவசாய கடனில் 80 சதவீதம் தேசிய வங்கிகளிலும், 20 சதவீதம் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், மத்திய அரசு 50 சதவீத கடனை தள்ளுபடி செய்தால், மாநில அரசும் தள்ளுபடி செய்ய தயாராக இருக்கிறது என்று நான் கூறினேன்.
அனைத்து தரப்பு மக்களின் நலனையும்...
உத்தரபிரதேச முதல்-மந்திரி, விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை அதற்கான உத்தரவை அவர் பிறப்பிக்கவில்லை. மராட்டிய மாநில அரசும் கடனை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது. இதற்கு ஒரு குழுவை அந்த மாநில அரசு அமைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதால், பஞ்சாப் மாநில அரசு விவசாய கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். விவசாயிகளும் இந்த கோரிக்கையை என்னிடம் கூறி வந்தனர். எங்கள் அரசு எப்போதும் விவசாயிகள், ஏழைகள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவான அரசு. அனைத்து தரப்பு மக்களின் நலனையும் காக்கும் அரசாக எங்கள் அரசு செயல்படுகிறது.
விவசாய கடன் தள்ளுபடி
அதன் அடிப்படையில் நேற்று(நேற்று முன்தினம்) வரை நிலுவையில் உள்ள குறுகிய கால விவசாய கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம். உத்தர பிரதேச மாநிலத்தை போல் இல்லாமல், இதற்கு உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்படும். இந்த கடன் தள்ளுபடியால் கர்நாடக அரசுக்கு ரூ.8,165 கோடி நிதிச்சுமை ஏற்படும். இதன் மூலம் மாநிலத்தில் 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
இதேபோல் மத்திய அரசு உடனடியாக தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
ஜெகதீஷ் ஷெட்டர் வரவேற்பு
இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டபோது, ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மந்திரிகள் மற்றும் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று, தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை மத்திய பா.ஜனதா அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் பா.ஜனதா உறுப்பினர்களை பார்த்து குரலை உயர்த்து பேசினர்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்காக பெங்களூருவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு இருந்தோம். விவசாயிகளும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். இதை ஏற்று சித்தராமையா இன்று(நேற்று) விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். நான் இதை வரவேற்கிறேன். சித்தராமையாவுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களிலும் விவசாயிகளின் நலனுக்காக இதேபோல் மாநில அரசு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அனைத்துக்கட்சி குழு டெல்லிக்கு சென்று, தேசிய வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.