திருவள்ளூர் அருகே ரூ.9 லட்சம் மோசடி; முதுகலை மேலாளர் கைது

திருவள்ளூர் அருகே ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதுகலை மேலாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே ரூ.9 லட்சம் மோசடி; முதுகலை மேலாளர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 21), அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கோதண்டபாணி (வயது 48) மற்றும் திருவள்ளூரை அடுத்த புதிய திருப்பாச்சூரை சேர்ந்த தேவ கிளிண்டன் (வயது 23) ஆகியோர் கூட்டாக நடத்தி வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் தங்கள் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 2 கிராம் தங்கக்காசு மற்றும் 40 மாதங்கள் கழித்து இரட்டிப்பு தொகையாக ரூ.20 ஆயிரம் திருப்பித் தருவதாக கூறி விளம்பர படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த நிறுவனத்தில் சேர்ந்து பணம் செலுத்தினார்கள்.

ரூ.9 லட்சம் மோசடி

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் கூறியது போன்று முடிவடையும் காலத்தில் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை அந்த தனியார் நிறுவனத்தை அணுகி கேட்டபோது அவர்கள் சரியான பதில் எதுவும் கூறாமல் தலைமறைவாகிவிட்டனர். இவ்வாறாக மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.9 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் அளித்தனர்.

கைது

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரதீப் மற்றும் கோதண்டபாணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் நிறுவனத்தின் முதுகலை மேலாளரான தேவ கிளிண்டன் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே பதுங்கி இருந்த தேவ கிளிண்டனை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com