

ஆம்பூர்,
ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக ரோட்டரி சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டனர். அதனடிப்படையில் ஆம்பூர் ரோட்டரி சங்கம், பொதுமக்கள் பங்களிப்புடன் தமிழக அரசின் திட்டமான பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.78 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பாக ரூ.84 லட்சம் செலவில் 37 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை தமிழக அரசின் வருவாய் நிர்வாகத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நரிக்குறவர்களை சந்தித்து அவர்களின் வசிப்பிடம், வாழ்க்கை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள நரிக்குறவர் பிள்ளைகளின் கல்வி குறித்து கேட்டறிந்தார். நரிக்குறவர்களுக்காக தனியார் மூலம் செயல்படும் பள்ளியை பார்வையிட்டார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், ஆம்பூர் தாசில்தார் செண்பகவள்ளி, மண்டல துணை தாசில்தார் பாரதி, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலங்கிள்ளி, ரகு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாத்திகலீல், சசிக்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.