ரூ.15 லட்சம் நிலமோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு

ரூ.15 லட்சம் நிலமோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
ரூ.15 லட்சம் நிலமோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
Published on

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 58) என்பவர், தனது உறவினர் சிலருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு சேட் காலனியை சேர்ந்த ஒரு தம்பதி எனக்கு அறிமுகமானது. அப்போது அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களிடம் உள்ள 3 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இதை நம்பிய நான் அவர்களிடம் உங்கள் நிலத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, ரூ.45 லட்சத்து 64 ஆயிரத்து 500-க்கு விலை பேசி முடித்தேன். அதன் பின்னர் முன்பணமாக அவர்களிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தேன். அவர்களும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீதி தொகையை செலுத்தி நிலத்தை பத்திர பதிவு செய்து கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் என்னிடம் விற்பதாக கூறிய நிலத்தை வேறு ஒரு நபருக்கு அவர்கள் விற்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள். எனவே ரூ.15 லட்சத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com