‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்தேன் - உதித்சூர்யா தந்தை வாக்குமூலம்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும், மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாகவும் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்தேன் - உதித்சூர்யா தந்தை வாக்குமூலம்
Published on

தேனி,

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோர் திருப்பதியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் தேனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

தேனி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் முன்னிலையில் உதித்சூர்யா சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் பிளஸ்-2 முடித்துவிட்டு 2 முறை தொடர்ச்சியாக நீட் தேர்வு எழுதினேன். 2 முறையும் தோல்வி அடைந்தேன். நான் டாக்டராக வேண்டும் என்று எனது தந்தை ஆசைப்பட்டார். அவருடைய ஆசையால், வேறு நபர் மூலம் தேர்வு எழுத புரோக்கரை நாடினார். அந்த புரோக்கர் யார்? தேர்வு எழுதியது யார்? என்பது எனக்கு தெரியாது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத எனது தந்தையே காரணம்.

இவ்வாறு உதித்சூர்யா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனிடமும் வாக்குமூலம் பெற்றனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் டாக்டராக உள்ளேன். எனது மகனை டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவன் பிளஸ்-2 முடித்தவுடன் நீட் தேர்வு எழுத வைத்தேன். அதில் தேர்ச்சி பெறவில்லை. 2-வது முறையாக எழுதிய தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை.

இதனால், எப்படியாவது எனது மகனை டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, புரோக்கர் ஒருவரை நாடினேன். அவர் மூலம் வேறு ஒரு நபரை வைத்து தேர்வு எழுத முயற்சி செய்தேன். இதற்காக புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்தேன். மகனை டாக்டராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்து விட்டேன். இதன் பின்விளைவுகளை நான் உணரவில்லை.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com