

விருதுநகர்,
தமிழக அரசு பொங்கலை யொட்டி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000-ம் பொங்கல் பரிசாக வழங்கியதை தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அறிவித்ததுடன் இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 60 லட்சம் பேர் இதனால் பயன் அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி பெறுவதற்கான பட்டியலை மாவட்ட நிர்வாகம் தயாரித்துள்ளது. இப்பட்டியல் தயாரிப்பில் கிராமப்பகுதிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே பல கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு கொடுத்துள்ளனர். நகர் பகுதிகளிலும் இப்பட்டியலில் குழப்பம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் அடிப்படையாகவும், அதனை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு வாக்கில் மறுஆய்வு செய்த பட்டியலின் அடிப்படையிலும் இந்த பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திடீரென ரேஷன் கடைகளில் 35 கிலோ அரிசி பெறும் பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
விருதுநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முதல் பட்டியலில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 282 பேர் இருந்த நிலையில் இரண்டாவது பட்டியலில் 111 பேர் மட்டும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி பெறுபவரின் விவரப்படி பட்டியல் தயாரித்தால் பயனாளிகளின் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பயனாளிகளின் பட்டியலில் குழப்பம் உள்ளதாகவும், சில பகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பரவலாக புகார் கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் அரசு அறிவித்தபடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த நிதிஉதவி சென்று சேரும் வகையில் இதற்கான பயனாளிகளின் பட்டியலை மறுஆய்வு செய்து தகுதி உள்ளவர்கள் மட்டும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 24-ந்தேதி இந்த நிதி உதவி பட்டுவாடா தொடங்கப்பட உள்ள நிலையில் சரியான பட்டியலை அதற்குள் இறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஊராட்சி 6-வது வார்டில் பலரது பெயர் பயனாளிகள் பட்டியலில்சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் நேற்று வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். முதல்-அமைச்சர் அறிவித்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தங்களது பெயரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பின்பு அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் இதுகுறித்து மனு கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.