மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனுக்களுடன் 2 பெண்கள் வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், திண்டுக்கல் சேடப்பட்டியை சேர்ந்த சரளா, ஏ.ஆர்.சி. தெருவை சேர்ந்த லட்சுமி என்பதும், மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது புகார் அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தாங்கள் கொண்டுவந்த புகார் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

சரளாவின் மகன் நிர்மல்குமார் மற்றும் லட்சுமியின் அக்காள் மகன் மணிகண்டன் ஆகியோர் என்ஜினீயரிங் பட்டதாரிகள். சேடப்பட்டியில் வசிக்கும் ஒருவர் மூலம் சென்னையை சேர்ந்த 4 பேர் எங்கள் இருவருக்கும் பழக்கமானார்கள். பின்னர் 5 பேரும் எங்களை சந்தித்து தங்களால் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும், இதற்காக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இதை உண்மை என நம்பிய நாங்கள் தலா ரூ.15 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தோம். அதனை பெற்றுக்கொண்ட 5 பேரும் சில மாதங்களுக்கு பின்னர் எங்களை சந்தித்தனர். அப்போது நிர்மல்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு பணிநியமன ஆணை வந்துவிட்டதாக கூறி எங்களிடம் போலி பணி நியமன ஆணை நகலை காண்பித்தனர். மேலும் அசல் பணிநியமன ஆணை தபால் மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினர்.

ஆனால் அவர்கள் கூறியபடி பணிநியமன ஆணை எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை. பின்னர் நாங்கள் சென்னைக்கு சென்று விசாரித்த போது தான் அவர்கள் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. மனுக்களை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com