மடத்துக்குளம் பகுதியில் ரூ.5 கோடி தேங்காய்கள் தேக்கம் - வியாபாரிகள் கவலை

கொரோனா காரணமாக மடத்துக்குளம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பிலான தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மடத்துக்குளம் பகுதியில் ரூ.5 கோடி தேங்காய்கள் தேக்கம் - வியாபாரிகள் கவலை
Published on

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தென்னை விவசாயம் பிரதானம். இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்குள்ள தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் காங்கேயம் எண்ணெய் ஆலைகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும் லாரிகள் இயக்குவதற்கு பெரும்பாலோனார் வர தயக்கம் காட்டியதாலும் தேங்காய் வியாபாரிகள் தாங்கள் வாங்கிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். பெரும்பாலோனார் அதை குடோன்களில் இருப்பு வைத்து உள்ளனர். தேங்காய்கள் விற்க முடியாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். வியாபாரிகள் தாங்கள் வாங்கிய தொகைக்கு தேங்காய் விற்பனைக்கு போகுமா? என சந்தேகம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ஜோத்தம்பட்டி தேங்காய் வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

மடத்துக்குளம், கணியூர் பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேங்காய் பருவகாலம் தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் பருவகாலம் ஆரம்பிக்கும் போதே தமிழகத்தில் கொரோனா தொற்றும் தொடங்கி விட்டது. ஆனால் அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தேங்காய் சீசன் இல்லாத காரணத்தால் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து தேங்காய்களும், விற்பனைக்காக வெளி மாநிலம் சென்று வரும். தற்போது கொரோனா பிரச்சினை காரணமாகவும், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாகவும், மடத்துக்குளம் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து தேங்காய்கள் பறிக்கப்பட்டன. அவை தோட்டங்களிலும், குடோன்களிலும் தேக்கம் அடைந்து உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும்.

ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தான் இங்குள்ள தேங்காய்களை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். தேங்காய் பல நாட்கள் தேங்கி கிடப்பதால் அவை அழுகி பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என பயப்படுகிறோம். எனவே அரசு தேங்காய் வியாபாரியின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com