ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனையால் பரபரப்பு - போலீசார் விசாரணை

மேச்சேரியில் ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனையால் பரபரப்பு - போலீசார் விசாரணை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 35). இவருக்கும், அவருடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இதற்கிடையில் ராணி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவர் மூலம் ராணிக்கு கடந்த மே மாதம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த நபர் ராணியை விட்டு விட்டு சென்று விட்டார்.

இதையொட்டி ராணி செய்வதறியாது கண்கலங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் துப்புரவு வேலை செய்து வந்த ஜெயா என்ற பெண், ராணியிடம் ஏன், அழுது கொண்டு இருக்கிறாய் என கேட்டார். இதற்கு அவர் ஜெயாவிடம் நடந்ததை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைக்கேட்ட அவர் ராணியிடம் எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினருக்கு குழந்தை இல்லை, அவருக்கு குழந்தையை விற்று விடலாம் என கூறினார். இதற்கு ராணி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து ராணி வெளியேறி குழந்தையுடன் மேச்சேரி சென்று விட்டதாக தெரிகிறது. அங்கு வைத்து ஜெயா தெரிவித்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு பெண் குழந்தையை ராணி விற்று விட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை விற்ற பின்பு ராணி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டார். இதன் காரணமாக அவரிடம் இருந்து பெற்ற பணத்தை செலவு செய்யாமல் ராணி இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் ராணி அங்கு ஜெயாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுத்தருமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அங்கு நின்றவர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை விற்பனையில் யார்? யார்? எல்லாம் புரோக்கராக செயல்பட்டார்கள், அவர்களுக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது?, இது போன்று ஏற்கனவே குழந்தை விற்பனை நடைபெற்றதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தை விற்பனை தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com