சேலத்தில் ரூ.86 லட்சம் கையாடல்: மாநகராட்சி ஊழியர், சகோதரருடன் கைது

சேலத்தில் ரூ.86 லட்சம் கையாடல் செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர், அவரது சகோதரருடன் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் ரூ.86 லட்சம் கையாடல்: மாநகராட்சி ஊழியர், சகோதரருடன் கைது
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இதில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் 2018-19-ம் நிதியாண்டு தணிக்கை செய்தபோது, ரூ.86 லட்சம் வரை கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அம்மா உணவக கணக்கில் இருந்து அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத காய்கறி மார்க்கெட்டை சேர்ந்த மோகன்குமாரின் வங்கி கணக்கிற்கு ரூ.45 ஆயிரத்து 825-ம், அவரது மனைவி பிரபாவதி கணக்கிற்கு ரூ.42 ஆயிரத்து 425-ம் மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டதில், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த கருங்கல்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவர், வருவாய் நிதி, குடிநீர் வடிகால் நிதி, அம்மா உணவக நிதியின் ரொக்க பதிவேடு, செலவு பட்டியல், காசோலை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்து ரூ.86 லட்சத்து 45 ஆயிரம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இந்த தொகையை அவர், தனது தாயார் விஜயா, சகோதரர் மோகன்குமார், மனைவி பிரபாவதி உள்பட 4 பேரின் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மாநகராட்சி ஊழியர் வெங்கடேஷ்குமார், அவரது தம்பி மோகன்குமார், பிரபாவதி, விஜயா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, நிதி கையாடல் புகாரில் சிக்கிய ஊழியர் வெங்கடேஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கையாடல் புகாரில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் வெங்கடேஷ்குமார், அவரது சகோதரர் மோகன்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் கையாடல் செய்த பணத்தில் ரூ.5 லட்சத்தை அலுவலக பணியாளர்கள் 2 பேர் தன்னிடம் இருந்து வாங்கியுள்ளதாக வெங்கடேஷ்குமார் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் யார்? இந்த மோசடியில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com