ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாபஸ் பெற்றனர்.
ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான தொழிற்சாலை கீரிப்பாறையில் உள்ளது. ரப்பர் கழகத்தின் கீழ் மருதம்பாறை, மயிலார், கல்லாறு, குற்றியாறு, மணலோடை, காளிகேசம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணி, ரப்பர் மரங்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இடைக்கால நிவாரணமாக தமிழக அரசால் ரூ.23 வழங்கப்பட்டது.

இதற்கிடையே இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.23-ஐ இறுதியான சம்பளம் எனக்கூறி அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அரசு ரப்பர் கழக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் அரசு தன்னிச்சையான முடிவு எடுத்ததாக கூறி அரசு ரப்பர் கழக தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் குற்றம் சாட்டினர். மேலும் குமரி மாவட்டம் வந்த வனத்துறை அமைச்சரிடமும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 30-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.

இதற்கிடையே நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் அப்துல் காதர் சுபேர், அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் வேணுபிரசாத் ஆகியோர், தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த இளங்கோ, சிற்றார் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த வல்சகுமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமாரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், சோனியா- ராகுல் தொழிலாளர்கள் நலச்சங்க நிர்வாகி குமரன், பி.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகி ராஜேந்திரன், ஜனதாதள தொழிற்சங்க நிர்வாகி ஞானதாஸ் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதால் அவர்கள் வந்ததும் சம்பள பிரச்சினை தொடர்பாக பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருகிற 20-ந் தேதிக்குள் சம்பள பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும், அதுவரை தற்காலிகமாக தங்களது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது எனவும், அதன்பிறகும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com