

கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள தென்கோவனூர் கிராமத்தில் அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த பலருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. இதை கண்டித்தும், அனைவருக்கும் புயல் நிவாரண பொருட்களை வழங்கக்கோரியும் கிராம மக்கள் நேற்று கோரையாறு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.