குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் மும்பை கோர்ட்டில் வழக்கு

குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் மும்பை கோர்ட்டில் வழக்கு
Published on

மும்பை,

நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது மகனை இழந்த நிசார் சையது என்பவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜாமீனில் வெளிவந்து கோர்ட்டின் விசாரணையை எதிர்கொண்டு வரும் சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும். மேலும் அவர் முறையாக சிறப்பு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடவேண்டும்.

அவர் தனது உடல்நலத்தை காரணம் காட்டி தான் ஜாமீன் பெற்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு அவர் உடல்நலத்துடன் இருக்கிறார் என்றால் அவர் கோர்ட்டை தவறாக வழி நடத்தியிருக்கிறார் என தெரிகிறது. எனவே அவரது ஜாமீனையும் ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி, சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு எடுப்பது கோர்ட்டு சம்பந்தப்பட்டதல்ல, இதுகுறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவிட்து.

சமீபத்தில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே தவறாக தன்னை சிக்க வைத்ததாகவும், தன்னுடைய சாபத்தினாலேயே மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளால் அவர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகவும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

இந்த சர்ச்சை கருத்துகள் தொடர்பாக தேர்தல் கமிஷன் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com