சேலம் ஜான்சன்பேட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் வீதி, வீதியாக பிரசாரம்

சேலம் ஜான்சன்பேட்டையில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் பிரசாரம் செய்தார்.
சேலம் ஜான்சன்பேட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் வீதி, வீதியாக பிரசாரம்
Published on

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட ஜான்சன்பேட்டை பகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கு 12-வது வார்டு அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் திலகம் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மணக்காடு, பிள்ளையார் நகர், கோர்ட்டு ரோடு காலனி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக்கூறி அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பொதுமக்களிடம் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் கூறும்போது, சேலத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும், என்றார்.

இந்த பிரசாரத்தின்போது, பன்னீர்செல்வம் எம்.பி., 12-வது வார்டு செயலாளர் கலையமுதன், பா.ம.க.மாநில துணைத்தலைவர் கார்த்தி, அஸ்தம்பட்டி பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் மோகனசுந்தரம் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

இதேபோல், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், வெற்றிவேல், த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் உள்பட கூட்டணி கட்சியினரும் சென்று அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com