சேலம் மத்திய சிறையில் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் திடீர் சோதனை

சேலம் மத்திய சிறையில் உதவி கமிஷனர் சேகர் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் மத்திய சிறையில் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் திடீர் சோதனை
Published on

சேலம்,

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதி என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள ஒரு சில கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதே போன்று பல கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.

இதைத்தொடர்ந்து சிறை காவலர்கள் அவ்வப்போது கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்து வருகின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பழனியம்மாள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 25 போலீசார் மற்றும் சேலம் சிறை காவலர்கள் 30 பேர் ஆகியோர் கூட்டாக நேற்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக சென்றனர். பின்னர் 10 குழுக்களாக பிரிந்து அங்கு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு அறையாக சென்று கஞ்சா, செல்போன் உள்ளதா? என்று திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து சிறை வளாகத்திற்குள் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாரின் பேரில் சிறை காவலர்களுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. தற்போது நடந்த இந்த சோதனையில் கஞ்சா, செல்போன் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இது போன்ற சோதனை அவ்வப்போது தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். போலீசாரின் இந்த திடீர் சோதனையால் நேற்று சேலம் மத்திய சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com