

கோவில்பட்டி,
கோவில்பட்டி எங்க் சேலன்ஜர்ஸ் ஆக்கி கிளப் சார்பில் 10வது ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் ஆக்கி மைதானத்தில் கடந்த 19ந்தேதி தொடங்கிய இந்த ஆக்கி போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இறுதி போட்டியில் சேலம் தன்ராஜ் ஆக்கி அணியும், கோவில்பட்டி ராஜூவ்காந்தி ஆக்கி அணியும் மோதின. ஆட்ட முடிவில் 2 அணிகளும் கோல் போடவில்லை. இதனால் 2 அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஸ்டோக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சேலம் அணி 54 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடந்த 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் ஆக்கி அணியும், மதுரை திருநகர் ஆக்கி அணியும் மோதிக்கொண்டன. இதில் 10 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் ஆக்கி அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு
அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வக்கீல் மோகன் தாஸ் தலைமை தாங்கினார். வக்கீல் சண்முகராஜ் வரவேற்றார். டாக்டர்கள் பாலன், சுகிர்தராஜ், கோவில்பட்டி தாலுகா வினியோக அதிகாரி சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
முதல் இடம் பிடித்த சேலம் தன்ராஜ் ஆக்கி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், ஜெயபால் நினைவு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. 2வது இடத்தை பிடித்த கோவில்பட்டி ராஜூவ்காந்தி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும், சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. 3வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.7 ஆயிரமும், 4வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முகபாரதி, முன்னாள் நகரசபை கவுன்சிலர் மாரியப்பன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ், முன்னாள் ஆக்கி வீரர் தமிழரசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டி ஏற்பாடுகளை எங்க் சேலன்ஜர்ஸ் ஆக்கி கிளப் செயலாளர் மாரியப்பன், சுந்தரபாண்டியன், கனகராஜ், சுதாகர், கருத்தப்பாண்டி ஆகியோர் செய்து இருந்தனர்.