

சேலம்,
சேலம் அருகே தளவாய்பட்டியில் ஆவின் பால்பண்ணை உள்ளது. இந்த பால்பண்ணைக்கு சொந்தமாக இரும்பாலை மெயின் ரோட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இதன் மேலாளராக குமார் என்பவர் உள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான பணத்தை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் செலுத்துவதற்காக அரசுக்கு சொந்தமான காரில் வந்தார்.
இந்த காரை மேட்டூர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 34) என்பவர் ஓட்டினார். வங்கி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கிய குமார் பணத்தை செலுத்துவதற்காக வங்கிக்கு நடந்து சென்றார். ரங்கநாதன் காரை ஓரமாக நிறுத்துவதற்காக மெதுவாக ஓட்டினார்.
அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.