சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணி தீவிரம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணி தீவிரம்
Published on

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2 கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2 கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக சுமார் 40 பணி யாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜகோபுரத்தின் நான்காம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 5-ம் நிலை கட்டுவதற்காக சுமார் 76 அடி உயரத்தில் 20 அடி நீளம் உள்ள சவுக்கு கட்டைகளால் சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணி முடிந்தவுடன் கட்டுமான பணி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com