திருவாவடுதுறை ஆதீன மடத்தில் சாமி நகைகள் கொள்ளை

கல்லிடைக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் சாமி நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் சாமி நகைகள் கொள்ளை
Published on

அம்பை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடம் உள்ளது. இதன் அருகில் மானந்தியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது.

கோவிலில் விழாக்காலங்களில் சுவாமி-அம்பாளுக்கு ஒட்டியாணம், கைகள், பாதம், ருத்ராச்ச மாலை உள்ளிட்ட 10 நகைகள் அணிவிக்கப்படும். இவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும். விழாக்காலம் முடிந்த பிறகு இந்த நகைகள் அருகில் உள்ள ஆதீன மடத்தில் மடாதிபதி அறையில் லாக்கரில் வைத்து பூட்டப்படும்.

ஆதீன மடாதிபதியான அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காலையில் மடத்துக்கு வந்தார். இதையொட்டி நேற்று முன்தினம் மடாதிபதி அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றனர். அப்போது மடாதிபதியின் அறையில் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதுபற்றி மடத்தின் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், விமல்குமார், இசக்கிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலையில் மடத்துக்கு வந்த மடாதிபதி அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடமும் போலீசார் விசாரித்தனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு மானந்தியப்பர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு நகைகள் அணிவிக்கப்படவில்லை.

இதனால் இந்த நகைகள் என்றைக்கு கொள்ளை போனது என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com