சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவிழாவை முன்னிட்டு 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா ஆலோசனை கூட்டம்
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதர் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நகரசபை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நான்கு மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள் ஆகிய இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நகருக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். விழாக்காலங்களில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக மின்சாரம் தடையின்றி சீராக வழங்க வேண்டும். கீழமாடவீதியில் விழாக்காலங்களில் கடைகள் வைத்து நடத்துவதை தடை செய்ய வேண்டும், தபசுக்காட்சி நடைபெறும் தெற்கு ரதவீதியில் நகரசபையின் மூலம் சவுக்கு கம்புகளுடன் கூடிய தடுப்புகள் வசதி செய்ய வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லவும் வெளியே பாதுகாப்பாக வரவும் கோவில் முன்பு கோவில் நிர்வாகம் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரால் நிறுவப்படும் தண்ணீர் பந்தல்களுக்கு இலவசமாக நகரசபை மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

தேரோட்டம் நடைபெறும் நாளில் அதிகாலையிலேயே ரதவீதிகளில் மண்ணை அகற்றி சுத்தம் செய்து தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும். தேரோட்ட திருவிழாவின்போது மருத்துவக்குழு மற்றும் மீட்புக்குழு வருகை தர வேண்டும். திருவிழாவின்போது கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்களை வடக்கு ரதவீதி மற்றும் மேலரதவீதி, பொருட் காட்சி திடலிலும் நிறுத்த வேண்டும். உணவு விடுதிகளில் விழாவின்போது வெள்ளை அடித்து, துப்புரவாக வைப்பதுடன் கொதிக்க வைத்து ஆறிய நல்ல தண்ணீர் மட்டும் வினியோகம் செய்ய வேண்டும். சிற்றுண்டி மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவு திண்படங்களை கண்ணாடி பெட்டியில் வைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். புறநகர் பஸ் நிலையத்தில் கூடுதலாக 5 சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும்.

ஆடித்தபசு திருவிழாவின்போது நெல்லை வழித்தடத்தில் இருந்து வரும் பஸ்களுக்கு நெல்லை ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அருகிலும், சிவகாசி, திருவேங்கடம், கோவில்பட்டி, கழுகுமலை வழித்தட பஸ்களுக்கு திருவேங்கடம் சாலையில் உள்ள புறநகர் பஸ் நிலையத்திலும், ராஜபாளையம் வழித்தட பஸ்களுக்கு ராஜபாளையம் ரோடு, கோர்ட்டு எதிர்புறம் உள்ள தீயணைப்புத்துறைக்கு சொந்தமான காலி இடத்திலும், புளியங்குடி, சுரண்டை வழித்தட பஸ்களுக்கு புளியங்குடி ரோடு, கோவிந்தப்பேரி தெப்பம் அருகிலும் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண், நகர்நல மருத்துவர் அனிதா, நகரசபை மேலாளர் லட்சுமணன், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com