சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் போலீஸ்காரர்கள் சிலர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின்போது நான் அங்கு இல்லை. எனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. தற்போது நான் முதுகு தண்டுவட பாதிப்பின் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்து தான் அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று சி.பி.ஐ. தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பாரதிதாசன், தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com