பருத்தி செடியை காப்பாற்ற ஊடுபயிராக ஆமணக்கை விதைக்க வேண்டும்

பருத்தி செடியை நோயிலிருந்து காப்பாற்ற ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக விதைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பருத்தி செடியை காப்பாற்ற ஊடுபயிராக ஆமணக்கை விதைக்க வேண்டும்
Published on

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியை அடுத்த சேடபட்டி ஒன்றியத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்தி செடிகளில் புரோடினியா (புகையிலை புழு) புழுக்கள் தாக்கி வருவதாக விவசாயிகளிடமிருந்து வந்த தகவலைத் தொடர்ந்து சேடபட்டி பகுதியில் உள்ள சின்னக்கட்டளை கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டி தலைமையில், வேளாண்மை துணை இயக்குனர் தனலெட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரசேகரன், வேளாண் அளவியல் நிலைய பேராசிரியர்கள் செல்விரமேஷ், மனோன்மணி, உஷாராணி வேளாண்மை அலுவலர் மதுரைசாமி, துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர் பெருமாள், வெற்றிச்செல்வன், குமரப்பன், பால்ராஜ், பிரித்விராஜன் ஆகியோர் அடங்கி குழுவினர் சின்னக்கட்டளை பகுதியில் பருத்தி செடிகளை ஆய்வு செய்தனர்.

இதில் புரோடினியா புழுக்கள் பருத்திச் செடியை தாக்கி வருவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இந்த புழுக்களை கட்டுப்படுத்த தோட்டத்தில் இனக்கவர்ச்சி பொறி வைத்து தடுக்கலாம், பறவைகள் அமர்வதற்காக ஆங்காங்கே பொம்மைகள் வைத்தால் அதில் அமரும் பறவைகள் இந்தப் புழுக்களை தின்றுவிடும். மேலும் பருத்தி செடி விதைக்கும்போதே பருத்திச் செடிகளை சுற்றியுள்ள வரப்பு ஓரங்களில் ஆமணக்கை பயிரிடவேண்டும். அத்துடன் இந்தப் புழுக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் இருக்க அகலமான வாய்க்கால்களை அமைத்தால் நோய் பரவாமல் தடுக்கலாம் என விவசாயிகளை அறிவுறுத்தினர்.

அதேபோல சேடபட்டி பகுதியில் 400 ஏக்கருக்கு மேல் வெள்ளைச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அவை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பருவநிலை மாற்றத்தினால் இந்தப் பயிர்கள் கரிப்பூட்டை நோயினால் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தாடையம்பட்டி பகுதியில் கரிப்பூட்டை நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளைச்சோளப் பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நோய் விரைவில் பரவக்கூடியவையாகும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாடுகளுக்குகூட தீவனமாக பயன்படுத்தக்கூடாது அப்படி பயன்படுத்தில் மாடுகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு (அலர்ஜி) நோய்கள் வர வாய்ப்பு உள்ளது .
மேலும் இந்த நோயை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் நிலத்தில் விழுந்து வீரியத்துடன்தான் இருக்கும் எனவே அடுத்து இந்த நிலத்தில் பயிரிடும்பொழுது விதை நேர்த்தி செய்து பயிரிடவேண்டும்.

அப்படி செய்தால் தான் பயிர்களுக்கு நோய்வராமல் தடுக்க முடியும். சோளப் பயிர் கதிர்விடும் போது, இதுபோன்ற பருவமாற்றம் ஏற்பட்டு தொடர்ந்து மழை பெய்தால் கரிப்பூட்டை நோயினால் பாதிக்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com