காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

கொரடாச்சேரி ஒன்றியத்தில் காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
Published on

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரத்து 69 எக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த பரப்பளவை எட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2,750 எக்டேர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 ஆயிரம் எக்டேர் பரப்பில் நடவு செய்வதற்கான நாற்றங்கால்களில் நெல் நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முக்கொம்பு மேலணையில் உடைப்பு ஏற்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரடாச்சேரி ஒன்றியத்தினை பொறுத்தவரை பாண்டவையாறு, வெண்ணாறு, வெட்டாறு, ஓடம்போக்கியாறு, வாளவாய்க்கால் ஆறு ஆகிய ஆறுகள் பாசன வசதியினை வழங்குகிறது.

இந்த ஆறுகளிலும் தண்ணீர் வரத்து நின்று போனதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களிலும், நெல் நாற்றங்கால்களிலும் தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்வரத்து இல்லாவிட்டாலும் ஆறு மற்றும் வாய்க்கால்களில் தேங்கிய நீரைக் கொண்டு இதுவரை சமாளித்து வந்தனர். ஆனாலும் ஒருசில இடங்களில் நெல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் வறட்சியால் பாதித்தன.

தற்போது முக்கொம்பு மேலணை உடைப்பு சரிசெய்யப்பட்டு கல்லணை மூலம் தண்ணீர் கொரடாச்சேரி பகுதி ஆறுகளில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு முழுமையாக சென்றடைய ஏற்ற வகையில் இல்லாமல், குறைந்த தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது.

எனவே உடனடியாக 6 ஆயிரம் எக்டேர் வயலுக்கான நெல் நாற்றங்கால்கள், 2,750 எக்டேர் நேரடி நெல் விதைப்பு வயல்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதி ஆறுகளில் கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போதுமான தண்ணீர் கிடைத்தால் மட்டுமே மீதமுள்ள 1309 எக்டேர் பரப்பிலும் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்படும். இல்லையேல் இந்த நிலங்கள் தரிசாகவே விட்டு விடும் நிலை ஏற்பட்டுவிடும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் நெல் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தண்ணீர் கிடைக்க செய்வதுடன் தேவையான உரம், பூச்சி மருந்து, விவசாயக் கடன் ஆகியவைகளையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com