

மும்பை,
மும்பைக்கு நேற்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் ஆரே காலனியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 88 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள 32 மாடிகள் கொண்ட மெட்ரோ பவனுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில், மெட்ரோ பவன் கட்டுவது, இதேபோல் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் 90 ஆயிரம் வீடு கட்டுவது போன்றவற்றிற்கு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்காக டெண்டர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் அந்த ஒப்பந்ததாரர்கள் பயனடைந்துள்ளனர். உண்மையை வெளிக்கொண்டுவர உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
சச்சின் சாவந்த் தனது புகாரை பிரதமர் அலுவலகம் மட்டும் இன்றி சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுக்கும் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:-
ஆரே காலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க மரங்களை வெட்ட மும்பை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் இந்த பணியைத் தொடர்கிறது. இந்த நிலையில் இதற்காக ஒப்பந்தம் வழங்குவதில் நடந்துள்ள ஊழல் அவர்கள் காயத்தில் உப்பு தேய்ப்பது போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.