‘ஸ்கேன்’ செய்யப்பட்ட மம்மி

நூறாண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் திறக்கப்படாமல் இருக்கும் ஓர் எகிப்து மம்மியை அமெரிக்க விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
‘ஸ்கேன்’ செய்யப்பட்ட மம்மி
Published on

நவீன சிங்ரோட்ரோன் எக்ஸ்ரேயைப் பயன்படுத்தி அந்த மம்மி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உயர்தன்மை கொண்ட சிங்ரோட்ரோன் எக்ஸ்ரேயை பயன்படுத்தி மம்மியை ஸ்கேன் செய்வது இதுவே முதல்முறையாகும்.

ஓர் உடலைப் பற்றிய அதிக விவரங்கள் கொண்ட முப்பரிமாண பகுப்பாய்வைத் தயாரிப்பதும், மம்மியின் மேலே சுற்றப்பட்டிருக்கும் துணிக்குக் கீழே வேறு எந்தப் பொருளும் ஒளிந்திருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதுமே இதன் நோக்கம்.

தற்போது ஸ்கேன் செய்யப்பட்டிருப்பது வழக்கமான மம்மி இல்லை. காரணம், இதில் உடல் மட்டும் பாதுகாக்கப்படவில்லை. இதனுடன் ஒரு குழந்தையின் படமும் உள்ளது.

அமெரிக்கா சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த மம்மியில், 1,900 ஆண்டுக்கு முன்பு இறந்த ஐந்து வயதுச் சிறுமியின் உடல் இருப்பதாக நம்பப்படுகிறது.

சிறுமியின் உடல் மட்டுமின்றி, அவளின் முகமும் வரையப்பட்டு, உடல் மீது இறுக்கமாகச் சுற்றப் பட்டிருக்கும் துணியின் மேலே வைக்கப்பட்டுள்ளது.

அச்சிறுமி அப்போது எப்படி இருந்தாள் என்பதை, வழக்கத்துக்கு மாறான இந்தப் படம் காட்டுகிறது. அத்துடன் இந்த ஸ்கேனிங் ஆய்வின் மூலம், சிறுமியின் உடல் மீது சுற்றப்பட்டிருக்கும் துணிக்குச் சேதம் ஏற்படாமல், அச்சிறுமியின் வாழ்க்கை, இறப்பு பற்றிய அதிகளவிலான தகவல்களை விஞ்ஞானிகள் வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்தக் குழந்தை இறக்கும்போது எவ்வளவு இளம் வயதில் இருந்தது என்பதை உணரும்போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது என நார்த்வெஸ்டர்ன் பேராசிரியர் மார்க் வால்டன் கூறுகிறார்.

மலேரியா அல்லது தட்டம்மை போன்ற நோய்கள்தான் அச்சிறுமியின் மரணத்துக்கான காரணங்களாக இருக்கும் என அவர் கூறுகிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் அறிஞர் சர் வில்லியம் பிளெண்டர்ஸ் பெட்ரியால் 1911-ம் ஆண்டு இந்த மம்மி எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே சிகாகோவில் உள்ள ஒரு கல்லூரிக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது முதல் கண்காட்சிகளில் இந்த மம்மி வைக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட மற்ற மம்மிகளை போல இல்லாமல், இது அப்படியே வைக்கப் பட்டது.

இந்த ஆண்டுதான் இதன் உள்ளே என்ன இருக் கிறது என்பதை ஆய்வாளர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட சி.டி. ஸ்கேனுக்காக, சிகாகோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இந்த மம்மி கொண்டு செல்லப்பட்டது.

பிறகு ஆர்கான் தேசிய ஆய்வகத்துக்கு இந்த மம்மி கொண்டுவரப்பட்டு, சிங்ரோட்ரோன் எக்ஸ்ரே மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், வரலாற்று காலத்துக்கு முந்தைய சிறுமிகளின் சராசரி வயது உள்ளிட்ட பல விஷயங்கள் தெரியவரும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com