உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கள்ளக்காதலன் கைது

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கள்ளக்காதலன் கைது
Published on

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணியைச் சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி சத்தியகலா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனோகர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சத்தியகலா, ஏரலில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி மகன் செல்வகணேஷ் (36). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது.

செல்வகணேசும், சத்தியகலாவும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 17-ந் தேதி செல்வகணேஷ், சத்தியகலாவை குரும்பூர் அருகே குரங்கண்தட்டுவில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு அழைத்து சென்று, உல்லாசமாக இருக்க அழைத்தார். ஆனால் சத்தியகலா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகணேஷ் அரிவாளால் சத்தியகலாவின் கழுத்தில் வெட்டினார். பின்னர் அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை செல்வகணேஷ் பறித்துச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த சத்தியகலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செல்வகணேசை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தென்திருப்பேரை பஸ் நிறுத்தம் பகுதியில் பதுங்கி இருந்த செல்வகணேசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com