

படிக்கட்டில் பயணம்
சென்னை பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவிஞர் கண்ணதாசன் நகர் நோக்கி நேற்று மாநகர பஸ்(தடம் எண் 33 சி) சென்று கொண்டிருந்தது. பஸ்சை கொளத்தூரைச் சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 56) ஓட்டினார். கண்டக்டரான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாபு (42) பணியில் இருந்தார். தங்கசாலை பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது அதே பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கும்பலாக ஏறினர். மாணவர்கள் பஸ்சின் உள்ளே செல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்
இதனை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டர் இருவரும் சக பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாலும், ஆபத்தான பயணம் என்பதாலும் மாணவர்களை படிக்கட்டில் தொங்காமல் உள்ளே ஏறி வரும்படி வலியுறுத்தினர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர்.
வியாசர்பாடி மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, பள்ளி மாணவர்கள் திடீரென டிரைவர் கணேசன், கண்டக்டர் பாபு இருவரையும் கைகளால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
அதில் 2 பேரை பயணிகள் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 மாணவர்களிடமும் வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் காயம் அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.