கடல் சீற்றத்தால் 3-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூரில் சாரல் மழை பெய்தது, கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றத்தால் 3-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு
Published on

கடலூர் முதுநகர்,

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலமாக இருந்தாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிருமாக இருந்து வருகிறது. அதிகாலையில் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் சுவட்டர், மப்லர் போன்றவற்றை அணிந்து செல்வதை காண முடிகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று காலையில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் காணப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஊட்டி, கொடைக்கானலை போன்று குளிர்ச்சியான நிலை இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் பகல் 1 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். சிலர் மழைக்கு அஞ்சி சாலையோர கடைகளில் ஒதுங்கி நின்றனர். இந்த மழை சில நிமிடங்கள் மட்டுமே பெய்தது. பகல் 2 மணியளவில் வெயில் அடித்தது.

அதேபோல் பண்ருட்டி, அண்ணாகிராமம், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

இதற்கிடையே கடலூரில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பல அடி உயரத்துக்கு பொங்கி எழுந்த கடல் அலைகள் கரையை நோக்கி வெகுதூரத்துக்கு சீறிப்பாய்ந்தது. இதனால் மீனவர்கள் கரையோரமாக நிறுத்தி வைத்திருந்த தங்களின் பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

கடலூர் துறைமுகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவார்கள். ஆனால் கடல் சீற்றம் காரணமாக கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று ஒரு சில மீனவர்களை தவிர பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 3-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com